வங்கதேசத்தில் கடந்த 2001-ல் பெங்காலி புத்தாண்டு விழாவில் குண்டுவெடித்த வழக்கில், ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி (ஹுஜி) அமைப்பின் தலைவர் உள்பட அந்த இயக்கத்தைச் சேர்ந்த 8 பேருக்கு நீதிமன்றம் திங்கள்கிழமை தூக்கு தண்டனை விதித்தது.
“ஹுஜி அமைப்பின் தலைவர் முப்தி அப்துல் ஹன்னனும் மற்றும் 7 பேரும் சாகும் வரை தூக்கிலிடப்படவேண்டும்” என நீதிபதி ருகுல் அமீன் தீர்ப்பு அளித்தார்.
“நாட்டின் அரசியல் ஸ்திரத் தன்மையை குலைக்கவும், மக்களி டையே பீதியை ஏற்படுத்தவும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட் டுள்ளது” என்றார் நீதிபதி. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேர் உள்பட மேலும் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2001-ல் ரம்னா பத்முல் என்ற இடத்தில் பெங்காலி புத்தாண்டு விழாவில் குண்டு வெடித்ததில் 10 பேர் உயிரிழந் தனர். இந்தத் தாக்குதலுக்கு ஹுஜி பொறுப்பேற்றது. இந்த விழா இஸ்லாமிய கொள்கைகளுக்கு விரோதமானது என்பதால் தாக்குதல் நடத்தியதாக அது கூறியது.
அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவை குறிவைத்து கடந்த 21-8-2004 அன்று கையெறி குண்டு வீசப்பட்டது. இதில் ஹசீனா நூலிழையில் உயிர் தப்பினார். எனினும் 24 பேர் உயிரிழந்தனர். இதில் ஹுஜி அமைப்பைச் சேர்ந்த 21 பேர் மீது போலீஸார் கடந்த ஜூன் 2008-ல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்தனர். இதற்கடுத்து இரண்டாவது முக்கிய வழக்காக 2001 குண்டு வெடிப்பு வழக்கில், ஹுஜி தலைவர் ஹன்னன் மற்றும் 13 பேர் மீது கடந்த 2009-ல் குற்றச் சாட்டு பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 61 பேர் சாட்சியம் அளித்தனர்.
2005-ல் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 5 பேர் இறந்தனர். இந்த குண்டு வெடிப்பு உள்பட மேலும் பல தாக்குதல்களை ஹுஜி நடத்தியுள்ளது. ஹுஜி இயக்கத்தை வெளி நாட்டு பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.