உலகம்

ஐ.எஸ். அழிக்கப்படும்: அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி

செய்திப்பிரிவு

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை அமெரிக்கா அழித்துவிடும் என அந்நாட்டு அதிபர் ஒபாமா உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மலேசியாவில் இருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா ஐ.எஸ். இயக்கம் குறித்த தனது கருத்தை பதிவு செய்தார்.

அவர் கூறும்போது, "ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை அமெரிக்க அழித்தொழிக்கும். ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்கொள்ள அமெரிக்காவிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் 'அச்சமின்மை'. அச்சுறுத்தலுக்கு அமெரிக்கா ஒருபோதும் அடிபணியாது. எனவே, அமெரிக்காவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்த முடியாது.

பயங்கரவாத கோட்பாடுகளுக்கு தாங்கள் ஒருபோதும் இரையாகிவிடாமல் அமெரிக்கர்கள் தங்களை மன உறுதியுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு நாம் மிகை மிஞ்சி எதிர்வினையாற்றினால் அதை தீவிரவாதிகள் தங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுவார்கள்.

ஐ.எஸ். இயக்கம் ஒரு கொலைகாரக் கூட்டம்; அவர்கள் சமூக வலைதளங்களில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஐ.எஸ். இயக்கத்தினைப் பற்றி இதைவிட அதிகமாக கற்பனை செய்ய வேண்டாம்.

ஐ.எஸ். அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், உலக நாடுகள் தொடர்ந்து தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT