நேபாளத்திலும், இலங்கையிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவின் கருத்துக்கு இந்திய அரசிடம் நேபாள அரசு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் திரிபுராவில் ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் பேசுகையில், “இலங்கையிலும், நேபாளத்திலும் கட்சியை விரிவுபடுத்த உள்ளதாகவும், அங்கு நம்மால் ஆட்சி அமைக்க முடியும் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் தேசியத் தலைவராக இருந்தபோது தன்னிடம் கூறினார்” எனத் தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.
இந்நிலையில், திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் கருத்துக்கு நேபாள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த நெட்டிசன் ஒருவர், பிப்லப் குமாரின் கருத்து குறித்து செய்தியை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் கியாவாலின் ட்விட்டர் கணக்கில் டேக் செய்து கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் பிரதீப் கியாவாலி, “முறையான கண்டனத்தை ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே டெல்லியில் உள்ள நேபாளத் தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய வெளியுறவுத் துறையின் நேபாளம், பூட்டானுக்கான இணைச் செயலாளர் அரிந்தம் பக்சியிடம், நேபாளத் தூதர் நிலம்பர் ஆச்சார்யா பேசி, திரிபுரா முதல்வர் பேச்சு குறித்த தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் கருத்து குறித்து இலங்கைத் தேர்தல் ஆணையத் தலைவர் நிமல் புன்சிஹெவாவிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்,
அதற்கு அவர் பதில் அளிக்கையில், “இலங்கையில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியும் வெளியில் உள்ள எந்தக் கட்சியுடனும், அமைப்புடனும் தொடர்பு வைக்க அனுமதி உண்டு. ஆனால், எங்களின் தேர்தல் சட்டப்படி, எந்தவிதமான வெளிநாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் எங்கள் நாட்டில் பணியாற்ற முடியாது” எனத் தெரிவித்தார்.