உலகம்

ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு 34 வயதான இந்திய வம்சாவளிப் பெண் போட்டியிட விருப்பம்

பிடிஐ

ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பதவிக்கு 34 வயதான இந்திய வம்சாவளிப் பெண் அரோரா அகாங்க்‌ஷா போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஐ.நா. சபையின் 9-வது பொதுச் செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2017 ஜனவரி 1-ம் தேதி பொறுப்பேற்றார். அவரின் பதவிக் காலம் 2021 டிசம்பர் மாத இறுதியில் முடிவடைகிறது. எனினும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவரே நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் 10-வது பொதுச் செயலாளர் பதவிக் காலம் ஜனவரி 2022-ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர்பதவிக்கு அரோரா அகாங்க்‌ஷா போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் தணிக்கை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வருபவர் அரோரா அகாங்க்‌ஷா. 34 வயதான இந்திய வம்சாவளிப் பெண்ணான இவர் உலகின் உயர்ந்த தூதர் பதவியான ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக #AroraForSG என்ற ஹேஷ்டேகில் பிரச்சாரத்தையும் தொடங்கி உள்ளார்.

இதுதொடர்பாக இரண்டரை நிமிடக் காணொலியையும் வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்த 75 ஆண்டுகளாக உலகத்துக்கு அளித்த அகதிகள் பாதுகாப்பு உள்ளிட்ட வாக்குறுதியை ஐ.நா. நிறைவேற்றவில்லை’ என்று அரோரா விமர்சித்துள்ளார்.

75 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக ஒரு பெண் பொறுப்பேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT