உலகம்

ஜிகாதி ஜானுக்கு சிரியாவில் மகன்: பிரிட்டன் குடியுரிமை பெற உரிமை

செய்திப்பிரிவு

பிரிட்டனைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதி ஜிகாதி ஜான் சிரியா வில் கடந்த வாரம் கொல்லப் பட்டார். அவருக்கு சிரியாவில் மகன் இருப்பதாகவும் வரும் காலத்தில் பிரிட்டன் குடியுரிமை பெற அக்குழந்தைக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) தீவிரவாதிகளின் வீடியோக்களில் பிணையக் கைதிகளின் தலையை துண்டித்து கொலை செய்பவர் ஜிகாதி ஜான். பிரிட்டனைச் சேர்ந்த இவரது இயற்பெயர் முகமது எம்வாஸி. ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு கடந்த 2013-ல் சிரியா சென்ற எம்வாஸி அந்த அமைப்பின் முக்கிய நபராக உருவெடுத்தார்.

இந்நிலையில் சிரியாவின் ரக்கா நகரில் கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவருக்கு சிரியாவில் ஒரு மகன் இருப்பது தெரியவந்துள்ளது. முகமது எம்வாஸி பிரிட்டன் குடிமகன் என்பதால் அவருக்கு பிறந்த குழந்தை (அது எந்த நாட்டில் பிறந்தாலும்) பிரிட்டன் குடியுரிமை பெறும் தகுதி பெறுவதாக டெலகிராஃப் இதழ் தெரிவிக்கிறது.

“சிரியாவில் பிறந்த இந்தக் குழந்தை பிரிட்டன் பாஸ்போர்ட் பெறுவதற்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது. மேலும் வரும் காலத்தில் இக்குழந்தை தனது தாய் மூலம் பிரிட்டன் வந்து இங்கு வசிக்க முடியும். அதை அதிகாரிகள் தடுக்க முடியாது. குழந்தையின் தாய் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் ஐரோப்பிய யூனியன் அல்லாத பிற நாடுகளைச் சேர்ந்தவராக இருந்தால், பிரிட்டன் விசா கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்” என்று அந்த இதழில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT