இலங்கையில் கொட்டித்தீர்க்கும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக, சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களால் 26 ஆயிரத்து 688 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 9 ஆயிரத்து 705 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் வெள்ளிக்கிழமை கூறியது. கன மழைக்கு இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். ஒருவரை காணவில்லை. 6 மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.
பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா கூறுகையில், “மேற்கு மாகாணத்தின் கலுத்ரா மாவட்டத்தில் தான் பெருமளவு இறப்புகளும், பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அங்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணத் தொகை வழங்கி வருகிறோம். இந்தத் தொகை போதாது என்கிறார்கள். ஆனால் நிதி அமைச்சகம் இவ்வளவுதான் ஒதுக்கியுள்ளது" என்றார்.
இந்நிலையில் மேற்கு மாகாணத்தில் 148 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக மாகாண கவுன்சில் கூறியுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் ராஜபக்சே ட்விட்டரில் கூறியுள்ளார்.
பல இடங்களில் சாலைகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பாதுகாப்பு படையினரும் போலீஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.