‘அணுகுண்டின் தந்தை’ என்று அறியப்பட்ட ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸதே கொலை வழக்கில் ராணுவத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஈடுபட்டிருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
மொஹ்சென் பக்ரிஸதே, ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சியின் மூளையாகச் செயல்பட்டு வந்தார். அணுசக்தித் துறையில் மிகவும் முக்கிய விஞ்ஞானியான மொஹ்சென், ‘அணுகுண்டின் தந்தை’ என்றே ஈரான் நாட்டு மக்களால் அழைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் ஈரான் தலைநகர் டெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் புறநகர் பகுதி வழியாக அவர் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, புதர் மறைவில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் அவரது காரைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தக் கொலையில் இஸ்ரேல் ஈடுபட்டிருப்பதாக ஈரான் தரப்பு தொடர்ந்து கூறிவந்தது. மேலும், ஆளில்லா விமானம் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. இந்த நிலையில் மொஹ்சென் பக்ரிஸதே கொலையில் ராணுவத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஈடுபட்டு இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தரப்பில், “மொஹ்சென் பக்ரிஸதே மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் ராணுவத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
ஈரானின் இக்கருத்துக்கு இஸ்ரேல் தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த 20 ஆண்டுகளாக ஈரானின் அணு ஆராய்ச்சியில் மொஹ்சென் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்ந்து புகார் கூறிவந்தன. இவர்தான் ரகசியமாக அணு ஆயுதங்களை ஈரானுக்குத் தயாரித்து வழங்கி வருகிறார் என்று இரு நாடுகளும் குற்றம் சாட்டி வந்தன.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஈரானில் அணு ஆயுத ஆராய்ச்சிகள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் பல காணாமல் போயின. அந்த ஆவணங்கள் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் வசம் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.