சிரியா ராணுவ தாக்குதலில் 58 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகி உள்ளனர்.
சிரியாவில் சன்னி, ஷியா முஸ்லிம்களுக்கு இடையே நீண்ட காலமாக பகை நீடித்து வருகிறது. அந்த நாட்டு அதிபர் பஸார் அல் ஆசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த தீவிரவாத அமைப்பு இராக்கின் பெரும் பகுதியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து அமெரிக்க கூட்டுப் படைகள் கடந்த சில மாதங்களாக சிரியா, இராக்கில் ஐ.எஸ். தீவிரவாத முகாம்களை குறித்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. ஆனால் அதிபர் ஆசாத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கவில்லை.
இந்நிலையில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் சிரியாவில் கால் பதித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்ய விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சிரியா அரசுப் படைகளுக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
அரசுப் படையின் டெர் எசோர் விமானப் படை தளத்தை குறிவைத்து ஐ.எ,ஸ். தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். சிரியா அரசுப் படையின் பதிலடியில் 58 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே அலெப்போ, டமாஸ்கஸ் புறநகர் பகுதி, ஹமா உள்ளிட்ட பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து ரஷ்ய விமானப் படை கடந்த சில நாட்களாக தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.