மியான்மர் நாட்டின் தலைமை ஆலோசகரான ஆங் சான் சூச்சி ஆரோக்கியமாக இருப்பதாக அவரது கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. ஆங் சான் சூச்சி, முறைகேடாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்ததாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அவரை பிப்ரவரி 15 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன. இந்த நிலையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூச்சியின் உடல் நலம் குறித்துப் பலரும் அச்சம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து தேசிய ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கெய் டோ கூறும்போது, “மியான்மர் நாட்டின் தலைமை ஆலோசகரான ஆங் சான் சூச்சி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.