வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு அமெரிக்க கூடைப்பந்தாட்ட என்பிஏ வீரர் கைல் குஸ்மாவும், தேசிய கால்பந்து லீக் (என்எப்எல்) வீரர் ஜுஜு ஸ்மித் சூஸ்டரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதில் என்எப்எல் வீரர் ஜூஜு ஸ்மித், விவசாயிகளின் மருத்துவச் செலவுக்காக ரூ.7.28 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து, என்பிஏ வீரர் குஸ்மாவும், என்எப்எல் வீரர் ஸ்மித்தும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரிஹானா குரல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.
ஆனால், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கருத்து கூறுவதை பாஜகவும், ஆளும் பாஜக அரசும் விரும்பவில்லை. கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் என்எப்எல் வீரர் ஜூஜூ ஸ்மித் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்தியாவில் போராடிவரும் விவசாயிகளின் மருத்துவச் செலவுக்காக 10 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி தருவதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதன் மூலம் மேலும் உயிரிழப்பு ஏதும் நிகழாமல் தடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் பிரபலமான என்பிஏ கூடைப் பந்தாட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர் அணியில் இடம் பெற்றுள்ள குஸும்பா, ரஹானாவின் ட்வீட்டை ரீட்வீட் செய்து, விவசாயிகள் போராட்டம் குறித்து நாம் பேச வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் என்பிஏ வீரர் பாரோன் டேவிட் பதிவிட்ட கருத்தில், “விவசாயிகள் போராட்டம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரப்ப வேண்டும். என்னுடன் சேருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.