உலகம்

ஏமன் போரில் சவுதிக்கு அளிக்கும் ஆதரவை அமெரிக்கா திரும்பப் பெறுகிறது: ஜோ பைடன்

செய்திப்பிரிவு

பிற நாட்டின் உள்நாட்டுப் போர்களில் அமெரிக்காவின் பங்களிப்பை நிறுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ராணுவம் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் அடுத்துப் பதவி ஏற்றுள்ள புதிய அரசு இதனைத் தொடர்ந்துள்ளது. அந்த வகையில் ஏமனில் சவுதி ராணுவப் படைகளுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜோ பைடன் கூறும்போது, “ஏமனில் நடக்கும் போர் முடிவுக்கு வர வேண்டும். ஏமனில் நடக்கும் போருக்கு அமெரிக்கா அளித்த அனைத்து ஆதரவுகளும் திரும்பப் பெறப்படுகின்றன. இதில் ஆயுத விநியோகமும் அடங்கும்” என்றார்.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT