இலங்கையில் நடந்த மதக்கலவரம் தொடர்பாக வேதனை தெரிவித்துள்ளார் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவர் நவி பிள்ளை. இது தொடர்பாக அவர் கூறியதாவது:
இலங்கை தென் மேற்கில் உள்ள அலுத்காமா பகுதியில் பேரினவாத அமைப்பு கட்டவிழ்த்துவிட்ட வன்முறை காரணமாக நிலைமை மோசம் அடைந்துள்ளது. இந்த வன்முறை நாட்டின் இதர பகுதிகளுக்கும் பரவும் அபாயம் நிலவுகிறது.
கலவரத்துக்கு காரணம்
வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளும் பகைமையை மூட்டிவிடுவதுமே கலவரத்துக்கு காரணம். இதைத்தடுக்க தம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மத சிறுபான் மையினருக்கு பாதுகாப்பு கிடைக்கும். இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் நடந்த கலவரத்தில் ஏராளமான நபர்கள் கொல்லப்பட்டுள்ளதும் காயம் அடைந்துள்ளதும் கலங்க வைத்துள்ளது.
உள்ளூரில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற புத்த பிக்கு ஒருவரை முஸ்லிம் இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ‘பொது பல சேனை’ என்கிற பௌத்தர்கள் குழு அலுத்காமா பகுதியில் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.
முஸ்லிம்கள் பெரும்பான்மை மிக்க பகுதிகள் வழியாக பேரணி நடத்திய போது பொது பல சேனை தொண்டர்கள் முஸ்லிம்களை எதிர்த்து கோஷமிட்டபடி சென்றதாக தெரிகிறது. அப்போது இரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்ததாக ஐநா மனித உரிமைகள் பிரிவு ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த கலவரத்தின்போது வீடுகள், கடைகள், மசூதிகள் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டன. நிலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, மேலும் 1200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.அப்படியும் நிலைமை கட்டுக்குள் வராமல் இரவு வரை கலவரம் தொடர்ந்தது.