உலகம்

வானிலை மாற்றம்: இந்தியக் கடலோர 5 கோடி மக்கள் தொகைக்கு அச்சுறுத்தல்

பிடிஐ

புவி வெப்பமடைதலின் தாக்கத்தினால் ஏற்படும் பருவநிலை, வானிலை மாற்றங்கள் காரணமாக கடலின் நீர் மட்டம் உயரும் அபாயம் இருப்பதால் இந்தியாவில் கடலோரப்பகுதிகளில் வாழும் சுமார் 5.5 கோடி மக்கள் பெரும் அழிவு அச்சுறுத்தலில் சிக்கியுள்ளதாக அமெரிக்காவில் இயங்கும் சுற்றுச்சூழல் இயக்கம் ‘கிளைமேட் செண்ட்ரல்’அறிக்கை எச்சரித்துள்ளது.

4 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை அதிகரித்தால் உலகம் முழுதும் சுமார் 50 கோடி மக்கள் வாழும் நிலப்பகுதியும், இந்தியாவில் 5.5 கோடி மக்கள் வாழும் கடலோரப்பகுதிகளிலும் கடல் நீரில் மூழ்கும் ஆபத்து இருப்பதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

4 டிகிரி வெப்ப அளவு அதிகரித்தால் சீனாவில் 145 மில்லியன் மக்கள் வாழும் நிலப்பகுதியும் கடல் நீரில் மூழ்கி விடும் என்கிறது.

“வெப்ப நிலை அளவு 4 டிகிரி அதிகரித்தால் சீனாவின் ஷாங்காய், ஷாண்டோ, ஹவுரா, மும்பை, ஹனாய் (வியட்நாம்), குல்னா (வங்கதேசம்)ஆகிய பகுதியில் வாழும் மக்கள் தொகையில் பாதி, அல்லது பாதிக்கு மேல் வாழும் நிலப்பகுதி கடலுக்குள் சென்று விடும் அபாயம் உள்ளது.

ஆனால் வெப்ப நிலை 2 டிகிரி அளவுக்கு மட்டுமே உயருமாறு குறைக்க முடிந்தாலும் இந்தியாவில் கடலோர மாவட்டங்களில் 2 கோடி மக்கள் வாழும் நிலப்பகுதி மூழ்கும் அபாயம் உள்ளது. சீனாவில் 64 மில்லியன் மக்கள் தொகை வாழும் நிலப்பகுதி கடலுக்குள் மூழ்கலாம்.

ஆசியாவுக்கு அப்பால், அமெரிக்காவில் 2.5 கோடி மக்கள் வாழும் நிலப்பகுதி கடலுக்குள் சென்று விடும் நிலை உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளே கரியமிலவாயுவை அதிகம் வெளியேற்றும் டாப் 3 நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT