அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை புதிய அதிபர் ஜோ பைடன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவில் நேற்று அதிபர் பைடன் கையொப்பமிட்டார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்ற முதல் ஆண்டில், அந்நாட்டு ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள், திருநங்கையர்கள் பணியாற்றத் தடை விதித்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக்கட்சியின் சார்பில் வெற்றி பெற்று புதிய அதிபராகப் பதவி ஏற்றுள்ள ஜோ பைடன், பல்வேறு புதிய உத்தரவுகளையும், ட்ரம்ப் பிறப்பித்து பல்வேறு உத்தரவுகளையும் ரத்து செய்து அறிவித்து வருகிறார்.
பதவி ஏற்ற சில மணிநேரங்களில் 15 உத்தரவுகளுக்கு மேல் அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டு உத்தரவிட்டார். இந்நிலையில் ேநற்று அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர் பணியாற்ற விதிக்கப்பட்ட தடையை அதிபர் பைடன் நீக்கினார்.
இதுதொடர்பாக ஓவல் அலுவலகத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஜஸ்டினுடன், அதிபர் ஜோ பைடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப்பின், ட்ரம்ப் ஆட்சியின்போது விதிக்கப்பட்டிருந்த ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்தார்.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த உத்தரவில், “அமெரிக்காவில் பிறந்த அனைத்து தகுதியுள்ள மக்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றலாம். உலகளவில் அமெரிக்கா வலிமையான, அனைவருக்கும் ஏற்ற நாடு. அதில் ராணுவம் எந்தவிதத்திலும் சளைத்தது இல்லை.
ராணுவத்தின் நலனுக்காகவும், தேசத்தின் நன்மைக்காகவும் தகுதிவாய்ந்த அனைத்து அமெரி்க்க மக்களும் ராணுவத்தில் பணியாற்றலாம். பாலினத்தின் அடிப்படையில் ராணுவத்தில் எந்தப் பாகுபாடும் இருக்கக்கூடாது. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அடுத்த 60 நாட்களில் என்னென்ன மாற்றங்கள், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறித்து அறி்க்கைத் தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவு குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ஆஸ்டின் கூறுகையில் “ அடுத்த 2 மாதங்களில் அதிபர் பைடன் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவோம். அதிபரின் உத்தரவுக்கு நான் முழுமையாக ஆதரவு அளிக்கிறேன். மூன்றாம் பாலினத்தவர்கள் யார் வேண்டுமானாலும் விருப்பம் இருந்தால் இனிமேல் ராணுவத்தில் பணியாற்றலாம். எந்தவிதமான பாலினப்பாகுபாடும் இருக்காது. இதுபோன்ற சரியான செயல்களைச் செய்ய சரியான நேரம்” எனத் தெரிவித்தார்.