இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி புகார்கள் எழுந்துள்ளதால், அவர் பதவி விலகக் கோரி ஜெருசேலம் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடி போராட்டம் நடத்தினர்.
நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் பிரதமர் நெதன்யாகு பதவி விலகக் கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருவதால், பெரும் நெருக்கடி நெதன்யாகுவுக்கு ஏற்பட்டுள்ளது.
ஊடக நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள் ஆகியோரிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டதாக பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக மோசடி, நம்பிக்கை மோசடி, ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
ஆனால், பிரதமர் நெதன்யாகுவோ, தான் எந்த விதமான தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து மறுத்துவருகிறார். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களோ, பிரதமர் நெதன்யாகுவை விசாரணைக்கு உட்படுத்தாதவரை நாட்டை சீராக நிர்வகிக்க முடியாது என்று வலியுறுத்துகிறார்கள்.
கடந்த கோடைக் காலத்தில் இருந்து ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் ஜெருசேலம் நகரில் உள்ள நெதன்யாகுவின் அதிகாரபூர்வ இல்லத்தி்ன் அருகே மக்கள் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் மெல்லப் பரவி தற்போது நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளில் 4-வது முறையாக கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. இதில் தன்னுடைய லிகுட் கட்சிக்குள்ளேயே நெதன்யாகுவுக்கு எதிர்ப்புக் கிளம்பியது.
மேலும், இஸ்ரேல் அரசு கரோனோ வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கையாண்ட முயற்சிகள், நடவடிக்கைகள் மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது, போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
இஸ்ரேலில் தற்போது 3-வது லாக்டவுன் அமலில் இருக்கிறது, நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் இன்னும் சுதந்திரமாக வெளியே செல்லவும் கரோனா வைரஸ் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே கரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணிகளையும் இஸ்ரேல் அரசு தொடங்கியுள்ளது. இதுவரை 25 லட்சம் மக்கள் கரோனா தடுப்பூசியில் முதல்கட்ட டோஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.