எலான் மஸ்க் 
உலகம்

கரியமில வாயு வெளியேற்றத்தை தடுக்கும் புதிய தொழில்நுட்பத்துக்கு 10 கோடி டாலர்: பரிசு அறிவித்தார் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்

செய்திப்பிரிவு

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்போருக்கு 10 கோடி டாலர் பரிசு அளிக்கப்படும் என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

புவி வெப்பமடைவது உலகை அச்சுறுத்தி வரும் மிகப்பெரிய இயற்கை சீற்றமாகும். இதைத் தடுப்பதற்காக கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை அனைத்து உலக நாடுகளும் எடுத்து வருகின்றன. இந்த விஷயத்தில் மிகப் பெருமளவிலான முன்னேற்றம் எட்டப்படவில்லை. இத்தகைய சூழலில் புவி வெப்பமடைவதைத் தடுக்கும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் புதிய மிகச் சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவோருக்கு 10 கோடி டாலர் பரிசளிக்கப்படும் என தனது ட்விட்டர் பதிவில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சர்வதேச எரிசக்தி முகமை வெளியிட்ட அறிக்கையில், கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையில் அதிகபட்ச கவனத்தை உலக நாடுகள் செலுத்த வேண்டும் என்றும் அதற்கு மேம்பட்ட தொழில்நுட்பம் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியிருந்தது.

இத்தகைய சூழலில் புதிய தொழில்நுட்ப உருவாக்கத்துக்கு எலான் மஸ்க் 10 கோடி டாலர் பரிசளிப்பதாக அறிவித்திருப்பது, புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க தூண்டுகோலாக அமையும்.

தொழில்முனைவோரான எலான் மஸ்க், முதலில் இணையதள பேமென்ட் நிறுவனமான பேபால் ஹோல்டிங்ஸை உருவாக்கி பின்னர் அதை விற்பனை செய்துவிட்டார். தற்போது முன்னோடி நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பேட்டரி கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனம் தவிர, ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்ணுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். நியூராலிங்க் எனப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனமும் இவருடையதே. இந்நிறுவனம் மனித மூளையைப் போல கம்ப்யூட்டர் செயல்பாடுகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT