இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகளாக பெரிய அளவில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில், தலைநகர் பாக்தாத்தில் பரபரப்பான மார்க்கெட் பகுதியில் நேற்று 2 இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில்32 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலருடைய நிலைமைகவலைக்கிடமாக உள்ளது. எனவே, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து இராக் அதிகாரிகள் கூறும்போது, ‘‘மத்திய பாக்தாத்தின் வர்த்தக மையத்தில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன’’ என்றனர். டயாரன் சதுக்கம் என்றுஅழைக்கப்படும் இந்த மார்க்கெட்டில் பெரும்பாலும் இரண்டாம் தர துணிவகைகள் விற்பனை அதிகமாக நடைபெறும். அதனால் ஏராளமான மக்கள் இந்த மார்க்கெட்டுக்கு வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இராக் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தற்கொலை படையைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர், மார்க்கெட் பகுதியில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சத்தமாகக் கூறியுள்ளார். மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்கள் அவரை சூழ்ந்த போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.அதில் படுகாயம் அடைந்தவர்களை மற்றவர்கள் சூழ்ந்து காப்பாற்ற முயற்சிக்கும் போது, 2-வது தற்கொலை படை தீவிரவாதி வெடிகுண்டுகளை வெடிக்கசெய்தான்’’ என்று தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இராக்பிரதமர் முஸ்தபா அல் கதேமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இரட்டை தற்கொலை படை தாக்குதலுக்கு இதுவரை எந்ததீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.