அமெரிக்கா தனது வரலாற்றில் சிறந்த அத்தியாயத்தை எழுத இருக்கிறது என்று அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்ற ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் மோசடி குற்றச்சாட்டு, நாடாளுமன்ற தாக்குதல் என அனைத்து தடைகளையும் கடந்து ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பதவியேற்றார். பதவி ஏற்பு விழாவில் ட்ரம்ப் கலந்து கொள்ளவில்லை. ஒபாமா, கிளிண்டன் போன்ற முன்னாள் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்பு விழாவில் ட்ரம்பின் ஆதாரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட கூடும் என்பதால் வெள்ளை மாளிகை முன் ஒருலட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
பலத்த பாதுகாப்புக்களுக்கிடையே ஜோ பைடனுக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் பேசியதாவது:
“ பிளவு, இருள் இல்லாமல் நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் நாட்டின் கதையை எழுதுவோம். நாம் உறுதியாக உள்ளோம். அமைதியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். என்னுடன் பணியாற்றும் என் ஊழியர்களே உலகம் நம்பை பார்த்துக் கொண்டிருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே எல்லை தாண்டி இருப்பவர்களுக்கு எனது செய்தி. அமெரிக்கா பரிசோதனைக்கு உள்ளானது. அதிலிருந்து தற்போது உறுதியாக மீண்டு வந்துள்ளது. நாம் நமது கூட்டணிகளை சரிசெய்து மீண்டும் புதுப்பிக்க வேண்டும். நேற்றைய சவால்கள் மட்டும் இல்லாது இன்றைய மற்றும் நாளைய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும்.
நாம் வெறுமனே நம்மிடம் இருந்த சக்தியின் உதாரணத்தால் அல்லாமல் நமது முன்மாதிரி சக்தியால் நாட்டை வழிநடத்துவோம். அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்கான வலுவான மற்றும் நம்பகமான பங்காளிப்பை நாம் அளிப்போம்.
நாம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், அதிகரித்து வரும் வைரஸ், சமத்துவமின்மை, இனவெறி இவைகளை எதிர்கொண்டுள்ளோம்.
இப்போது நாம் சோதிக்கப்படுகிறோம். நாம் அனைவரும் முன்னேறப் போகிறோமா?... செய்வதற்கு நிறைய இருப்பதால் இது தைரியத்திற்கான நேரம். இந்த அபாயகரமான நெருக்கடிகளை நாம் தீர்ப்போம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அமெரிக்கா கடந்த சில வாரங்களாக, மாதங்களாக வலிமிகுந்த பாடங்களை கற்றுள்ளது.
அதில் உண்மையும் இருக்கிறது, பொய்யும் இருக்கிறது. பொய் அதிகாரத்துக்காகவும், லாபத்திற்காகவும் சொல்லப்படுகிறது. நமது அரசியலமைப்பை மதிக்க மற்றும் நமது தேசத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்த தலைவர்கள் என ஒவ்வொருவருக்கும் குடிமக்களாக ஒரு கடமையும் பொறுப்பும் உள்ளது. பொய்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். அமெரிக்கா தனது வரலாற்றில் சிறந்த அத்தியாயத்தை வரும் காலங்களில் எழுத இருக்கிறது” என்றார்.
இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பலவேறு உலக நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பிடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.