இஸ்ரேல் நாட்டில் யூதர்களின் புனித தலத்தை பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது.
யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதமாக யூதர்கள் மீது பாலஸ்தீன போராட்டக்காரர்கள் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
இதன்படி ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் யூதர்களுக்கு எதிராக கத்திக் குத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இதுவரை 7 யூதர்கள் உயிரிழந்துள்ளனர். நுற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம், போலீஸாரின் பதிலடி தாக்குதல்களில் 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது.
இந்நிலையில் மேற்கு கரை பகுதி நப்லஸ் என்ற இடத்தில் உள்ள யூதர்களின் புனித தலத்தை பாலஸ்தீன போராட்டக்காரர்கள் நேற்று இரவு பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்தனர். இதனால் மோதல் முற்றியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் பீட்டர் லெர்னர் கூறியபோது, புனிதத் தலத்தை எரித்தவர்கள் தப்ப முடியாது, அவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீன அதிபர் கண்டனம்
யூதர்கள் புனித தலம் எரிக்கப்பட்டதற்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, நப்லஸ் சம்பவம் துரதிருஷ்டவசமானது, இதுதொடர்பாக உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியபோது, பாலஸ்தீனர்கள் புதிதாக கத்திக்குத்து தாக்குதலை தொடங்கியுள்ளனர், அதற்கு அஞ்ச மாட்டோம், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா சமாதான முயற்சி
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா. சபை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி அடுத்த சில நாட்களில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி இஸ்ரேல், பாலஸ்தீன பகுதிகளுக்கு செல்ல இருக்கிறார். அவரது தலைமையில் ஜோர்டானில் இஸ்ரேல் தரப்புக்கும் பாலஸ்தீன தலைவர்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.