உலகம்

இராக் எல்லைச் சாவடியை கைப்பற்றினர் தீவிரவாதிகள்: பிரதமர் மாலிகி அரசுக்கு மேலும் பின்னடைவு

செய்திப்பிரிவு

ஷியா பிரிவினர் ஆதிக்கம் மிக்க இராக் அரசின் படைகளை எதிர்த்து போரிட்டு வரும் சன்னி தீவிரவாதிகள் சிரியா எல்லையில் உள்ள இராக் சாலை சந்திப்பு பகுதியை கைப்பற்றினர். இந்த சண்டையின்போது 30 அரசுப் படையினரை அவர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்த தகவலை பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

தீவிரவாதிகள் காயிம் நகர எல்லை சந்திப்பு பகுதியை கைப்பற்றியது பிரதமர் நூரி அல் மாலிகி தலைமையிலான அரசுக்கு பெருத்த பின்னடைவு என்று கருதப்படுகிறது.

இராக்கின் பெரும் நிலப்பரப்பையும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மோசுலையும் கைப்பற்றியுள்ள சன்னி தீவிரவாதிகள் பாக்தாதை கைப்பற்றும் லட்சியத்துடன் தடைகளை களைந்து முன்னேறி வருகின்றனர்.

பாக்தாதின் மேற்கே 320 கி.மீ. தொலைவில் உள்ள எல்லைப் பகுதியில் இருக்கும் காயிம் நகர் அருகே உள்ள எல்லை சாலை சந்திப்பை கைப்பற்றுவதற்கு முன் இராக் அரசுப் படைகள் மீது தீவிர தாக்குதல் நடத்தினர்.

இந்த பகுதியை கைப்பற்றிய தன் மூலம் தீவிரவாதிகள் போர்ப் பகுதிகளுக்கு எளிதாக அதிக அளவில் ஆயுதங்களையும் பிற சாதனங்களையும் கொண்டு செல்ல வழி ஏற்பட்டுள்ளது.

இந்த பின்னடைவுக்கு மத்தியில், எல்லா தரப்பினரையும் உள்ளடக்கி புதிய அரசு அமைக்க வேண்டும் என பிரதமர் மாலிகிக்கு நெருக்குதல் தரப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டு இறுதியில் இராக்கை விட்டு அமெரிக்க படைகள் விலகிய பிறகு இப்போது சிக்கல் மிக்க நிலைமை ஏற்பட்டுள்ளதற்கு காரணம் மாலிகிதான் என அமெரிக்க அதிபர் மாளிகையும் நாட்டின் ஷியா மத உயர் தலைமையும் குற்றம்சாட்டுகின்றன.

இராக்கில் உள்ள எல்லா பிரிவினரும் இடம்பெறும் புதிய ஆட்சி அமைய வேண்டும் என அதிபர் ஒபாமா அறிவுறுத்திய நிலையில் ஷியா பிரிவினரின் உயர்தலைவராக மதிக்கப்படும் அயதுல்லா அலி அல் சிஸ்தானி, குர்து மற்று்ம சன்னி பிரிவு தலைவர்களை சந்தித்து நிலைமை சீரடைய மாலிகி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரலில் நடந்த தேர்தலில் அல் மாலிகியின் ‘சட்டத்தின் ஆட்சி கூட்டணி’ பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்றது. எனினும் பிரதமர் பதவியை அவர் தக்க வைப்பது கேள்விக் குறியாகி விட்டது. கூட்டணியில் உள்ள அவரது எதிர்ப் பாளர்களே அவருக்கு சவாலாக விளங்குகின்றனர்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைமையில் இயங்கும் சன்னி தீவிரவாதிகளுடன் தூக்கிலிடப் பட்ட சர்வாதிகாரி சதாம் ஹுசைனின் ஆதரவாளர்கள் போன்ற இதர குழுக்களும் இணைந்துள்ளனர். இஸ்லாமிய ஆட்சி என்பதே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நோக்கம்.

இராக்கில் பலம்வாய்ந்த தீவிரவாதக் குழுக்களில் முக்கிய மானது ஐஎஸ்ஐஎஸ். அண்டை நாடான சிரியாவிலும் இந்த அமைப்பு செயல்படுகிறது.

SCROLL FOR NEXT