அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் மைக் பென்ஸ் கலந்து கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் எலக்ட்டோரல் காலேஜ் முடிவுகளை அறிவிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த 6-ம் தேதி கூடின. அப்போது ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் நாடாளுமன்ற அவைக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த தனது ஆதரவாளர்களைத் தடுக்க ட்ரம்ப் தவறிவிட்டார். அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று ட்ரம்ப் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரதிநிதிகள் சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நாடாளுமன்றத் தாக்குதல்களுக்கு மைக் பென்ஸும் வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் ட்ரம்ப் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்த நிலையில், துணை அதிபர் மைக் பென்ஸ் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை வெள்ளை மாளிகை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். மைக் பைன்ஸ் முடிவை ஜோ பைடன் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து ஜோ பைடன் கூறும்போது, ''நிர்வாக மாற்றங்கள் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்கான வரலாற்று முன்னோடிகளாக நாம் இருப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். மைக் பென்ஸ் கலந்து கொள்வதை நினைத்துப் பெருமை கொள்கிறேன்'' என்றார்.