உலகம்

ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன்: ட்ரம்ப் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வரும் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் எலக்ட்டோரல் காலேஜ் முடிவுகளை அறிவிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த 6-ம் தேதி கூடின. அப்போது ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் நாடாளுமன்ற அவைக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த தனது ஆதரவாளர்களைத் தடுக்க ட்ரம்ப் தவறிவிட்டார். அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று ட்ரம்ப் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரதிநிதிகள் சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, “பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொள்கிறேனா என்று கேட்கும் அனைவருக்கும் நான் அளிக்கும் பதில், இல்லை என்பதே” என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் இம்முடிவுக்கு ஜோ பைடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT