அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: படம் உதவி | ட்விட்டர். 
உலகம்

ட்ரம்ப்புக்கு அடுத்த பின்னடைவு; அமெரிக்க செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி: ஜார்ஜியா தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி

பிடிஐ

அமெரிக்க அதிபர் தேர்தலில் அடுத்த திருப்பமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான மாகாணமான ஜார்ஜியாவில் நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் இரு வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் அமெரிக்க செனட் சபை ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

ஏற்கெனவே, பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், ஜார்ஜியா தேர்தல் முடிவுகளால், செனட் சபை குடியரசுக் கட்சிக்குச் சென்றுவிடுமோ என்ற குழப்பம் இருந்தது.

ஆனால், ஜார்ஜியாவில் நடந்த மறு தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் ரஃபேல் வார்னாக், ஜான் ஓஸாப் ஆகிய இருவரும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்கள் கெல்லி லியோப்லர், டேவிட் பெர்டியு ஆகியோரைத் தோற்கடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க செனட் சபையில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் 100 இடங்களில் 50:50 என்ற சரிவிகிதத்தில் உள்ளனர். ஏதாவது ஒரு முக்கிய மசோதாவில் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும்போது, துணை அதிபராகப் பதவி ஏற்க உள்ள கமலா ஹாரிஸ் அளிக்கும் வாக்கு பெரும்பான்மையை முடிவு செய்யும். இது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு அடுத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு துணை அதிபராகப் பதவி ஏற்க இருப்பதால், அவரின் வாக்கு நிச்சயம் ஜனநாயகக் கட்சிக்குத்தான் இருக்கும் என்பதால், செனட் சபையில் பெரும்பான்மையுடன் ஜனநாயகக் கட்சி செயல்படும்.

இதன் மூலம் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையாக இருக்கும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அனைத்தும், செனட் சபையிலும் பிரச்சினையின்றி நிறைவேற வழி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிபராகப் பொறுப்பு ஏற்க இருக்கும் ஜோ பைடன் எதிர்காலத்தில் எந்த மசோதாக்களையும் சிக்கலின்றி நிறைவேற்ற முடியும்.

ஆனால், ஒருவேளை ஜார்ஜியாவில் குடியுரசுக் கட்சி வென்றிருந்தால், செனட் சபையில் பெரும்பான்மையுடன் அமர்ந்து, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அனைத்தையும் நிறைவேற்றாமல் இடையூறு ஏற்படுத்தி, ஜோ பைடனுக்குத் தலைவலியை ஏற்படுத்துவார்கள். அதிலிருந்து ஜோ பைடன் தப்பித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் ரஃபேல் வார்னாக், ஜான் ஓஸாப்.

ஜார்ஜியா மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் ரஃபேல் வார்னாக், ஜான் ஓஸாப் இருவரும் பெற்ற வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், 51 வயதாகும் ரஃபேல் வார்னாக் அட்லாண்டாவில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து, மனித உரிமை ஆர்வலராகவும் இருந்து வருகிறார். ஜார்ஜியா மாகாண வரலாற்றிலேயே செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தில் இருந்து செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின அமெரிக்கர் என்பதும் கவனிக்கத்தக்கது.

மற்றொரு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜான் ஓஸாப், ஜார்ஜியாவில் இருந்து செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் யூதர் என்பது குறிப்பிடத்தக்கது. 33 வயதாகும் ஜான் ஓஸாப் செனட் சபைக்கு இளம்வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபராவார்.

SCROLL FOR NEXT