கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து லெபனானில் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லெபனான் அரசு வெளியிட்ட அறிக்கையில், “லெபனானில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,95,759 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,529 பேர் தொற்றுக்குப் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விரைவில் லெபனானில் ஊரடங்கு விதிக்க அரசு ஆலோசித்து வருகிறது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, சவூதி , பிரிட்டன், இந்தோனேசியா ஆகிய நாடுகளும் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 8.5 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.