இஸ்ரேலில் 13 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் அரசு வானொலி வெளியிட்ட செய்தியில், “இஸ்ரேலில் கடந்த சில நாட்களாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 13,70,000 பேருக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 1,46,000 பேருக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. 75 வயதைக் கடந்த 80 சதவீதத்தினருக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் பைஸர் கரோனா தடுப்பு மருந்துகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நவம்பர் மாதம் இஸ்ரேல் வந்தடைந்தன. மேலும், அமெரிக்காவின் மாடர்னா கரோனா தடுப்பு மருந்துகளைப் பெறவும் ஒப்பந்தம் போட்டுள்ளோம் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 8.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.