உலகம்

ரஷ்யாவில் ஒரே நாளில் 27,000-க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிப்பு

செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,000-க்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,039 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே ரஷ்யாவில் 30,000 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ரஷ்யாவில் 31 லட்சத்து 86 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கரோனா அதிகரித்து வரும் நிலையில் பிற நாடுகளுக்கு தடுப்பு மருந்தை ரஷ்யா விநியோகித்து வருகிறது. இந்த நிலையில் சொந்த நாட்டிற்கு முதலில் கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரியுங்கள் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.

மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின்.

ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92% பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு கடந்த மாதம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளது.

SCROLL FOR NEXT