சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் சிறந்த கேலிச் சித்திரக்காரர்களில் ஒருவரான ஆர்.கே.லக்ஷ்மணின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு, கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் டூடுல் மூலம் இன்று அஞ்சலி செலுத்துகிறது.
இது குறித்து கூகுள் வெளியிட்டுள்ள டூடுல் குறிப்பில், "சமூகத்தின் போலித்தனம் மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அமைதியான வகையில் அம்பலப்படுத்தும் சாமானிய மனிதன் என்னும் பாத்திரத்தாலேயே, லக்ஷ்மண் அதிகம் பிரபலமானார்.
செயல்திறன்மிக்க, கலையார்வம் கொண்ட அவரின் கைகளுக்கும், கூர்மையான அறிவுக்கும் மரியாதை செய்யும் விதமாக இந்த டூடுல் அமைக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
ஆர்.கே.லக்ஷ்மண் என்று அறியப்பட்ட ராசிபுரம் கிருஷ்ணமாச்சாரி லக்ஷ்மண், அக்டோபர் 24-ம் தேதி 1921ல் மைசூரில் பிறந்தார். பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஆறு மகன்களில் ஒருவராகப் பிறந்தார்.
மேற்கத்திய உலகின் பிரபல கேலிச் சித்திரக்காரரான சர் டேவிட் லோவின் சித்திரங்களால் ஈர்க்கப்பட்டவர், பின்னாளில் உலகம் போற்றும் கேலிச்சித்திரக்காரர் ஆனார்.
புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் இவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.