ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 949 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டோக்கியோவில் சில நாட்களாகவே 800க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. டோக்கியோவில் இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு விடுமுறை காரணமாக கரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.
பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் கொண்ட கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன. சமூக இடைவெளியை மக்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.