சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சவுதி அரசு ஊடகம் தரப்பில், “ மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. வரும் முன் காப்பதே சிறந்தது என்பதன் அடிப்படையில் மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ளது. ஆரோக்கியமே முக்கியம் என்று தெரிவித்துள்ளது.
சவுதிக்கு இம்மாதத்தில் பைசர் கரோனா தடுப்பு மருந்து வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து சவுதி கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவால் உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.