உலகம்

போரால் 60 ஆண்டுக்கு முன்பு பிரிந்தவர்கள்: கண்ணீர் மல்க விடைபெற்ற கொரிய உறவுகள்

பிடிஐ

கொரிய தீபகற்பத்தின் மவுண்ட் கும்காங் பகுதி நேற்று உணர்ச்சிப் பெருக்கால் நிறைந்திருந்தது. அங்கு கூடியிருந்தவர்களில் பெரும் பாலானவர்கள் 70, 80, 90 வயது டையவர்கள். கண்களில் நீர் மல்க தங்களின் சொந்தங்களிடமிருந்து விடைபெற்றனர். இனி அந்த உறவுகளை மீண்டும் காண்போமா என்ற ஏக்கம் அவர்களின் முகத்தில் தெரிந்தது.

மவுனமும் விசும்பல்களும் அங்கு கனத்த சூழலை உருவாக்கி யிருந்தன. அவர்கள் 1953-ம் ஆண்டுக்கு முன்பு ஒன்றாக வாழ்ந்தவர்கள். சகோதர உறவாக, பெற்ற உறவாக, திருமண உறவாக வாழ்ந்தவர்கள்.

1950-53-ம் ஆண்டுகளில் நடை பெற்ற போரின் விளைவாக கொரிய தீபகற்பம் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிந்தது. அப்போது ஏராளமான மக்கள் தங்கள் உறவு களை எல்லைகளுக்கு அப்பால் தொலைத்தார்கள். பலர் எங்கிருக் கிறார்கள் எனத் தெரியாமல் வாழ்ந்தனர்.

வடகொரியாவில் கம்யூனிஸ ஆட்சி நடைபெற, தென் கொரியா வில் ஜனநாயகம் மலர்ந்திருக் கிறது. இரு நாடுகளுக்கு இடையே எப்போது வேண்டுமானாலும் போர் மூளலாம் என பதற்றமான சூழல்.

நல்லெண்ண அடிப்படையாக பிரிந்திருக்கும் இரு நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 530 பேர், வடகொரி யாவின் மவுன்ட் கும்காங் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக சந்தித்து தங்களின் உறவுகளை அடையாளம் கண்டுகொண்டனர்.

இந்த உறவுகளில் கணவன், மனைவி, சகோதரன் என 60 ஆண்டுகளுக்குப் பின் தங்களின் சொந்தங்களைக் கண்டவர்கள் ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.

நேற்று சந்திப்புக்கான மூன்றாவது மற்றும் கடைசி நாள். தங்கள் நாடுகளுக்கு அவர்கள் பிரிந்து சென்றாக வேண்டும்.

மூப்படைந்து விட்டதால், இதுவே தங்களின் கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம் எனப் பலர் எண்ணியிருக்கக் கூடும். 85 வயதான லீ சூன், பிரிந்த தனது வடகொரிய கணவரைப் பார்த்துச் சொன்னார், “ஆரோக்கியமாக இருங்கள், நீண்ட நாள் வாழுங்கள்” என்று. அதற்கு அவர், “அடுத்த ஜென்மத்தில் மீண்டும் சந்திப்போம்” எனக் கூறி விடைபெற்றார். இருவரும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறை சந்தித்துக் கொண்டனர்.

இன்னும் சிலர், பிரியும் தருவாயில் சில நிமிடங்கள் பரஸ்பரம் அணைத்தபடி மவுனம் காத்தனர். சிலரோ, கைகளைப் பிடித்தபடி, கண்ணில் வழியும் நீரைத் துடைத்து விட்டுக் கொண்டனர்.

வடகொரியாவைச் சேர்ந்த 88 வயதான ரி ஹாங், தென் கொரியாவில் வசிக்கும் தனது மகளைப் பிரிந்து செல்கிறார். “நேற்றிரவு அதிகமாக அழுதேன். இன்று காலையிலும் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது” என்றார்.

வடகொரியாவிலிருந்து அவர் களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் வந்ததும், அனை வரின் கண்களிலும் கண்ணீர். பிரிந்து செல்வதின் வலி அனை வரின் முகத்திலும் இருந்தது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT