உலகம்

தமிழ்க் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை: இலங்கை அரசு திட்டவட்டம்

பிடிஐ

இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகளாக உள்ள 200-க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்று அந்நாட்டு அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், அரசியல் கைதிகளுக்கு ஜாமீன் வழங்குவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இலங்கையின் தேசிய பேச்சுவார்த்தை அமைச்சர் மனோ கணேசன் இன்று கூறும்போது, "பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் பிரதிநிதிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தச் சந்திப்பில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. பொதுமன்னிப்பு வழங்குவது சாத்தியமில்லை என்று பிரதமர் தெரிவித்துவிட்டார்.

ஆனால், ஜாமீன் நடைமுறைகள் செயல்படுத்தப்படும். தங்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளவர்களும், போலீஸ் நடவடிக்கையின் கீழ் உள்ளவர்களும் ஜாமீன் பெறலாம். இதற்காக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இலங்கை அரசின் இந்த நிலைப்பாடு, பல்வேறு சிறைகளில் உள்ள தமிழ்க் கைதிகளுக்கு மிகுந்த பின்னடைவாக கருதப்படுகிறது.

முன்னதாக, இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு 2009-ம் ஆண்டு முதல் ஏராளமான தமிழர்கள் உரிய விசாரணையின்றி சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்க முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக முந்தைய ராஜபக்சே அரசு இதற்கு காரணம் கூறியது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து பின்னர் சரணடைந்த 8,000-க்கும் மேற்பட்டோர் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களும் இதில் அடங்குவர். இவர்கள் மீதான வழக்குகள் தொடர்புடைய சட்ட நடைமுறைகள் காலதாமதாகவே நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது கவனிக்கத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, தமிழக் கைதிகளில் 200-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு நீதி வேண்டி சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

இதையடுத்து, அரசு சார்பில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதி அளித்ததன் காரணமாக, அவர்கள் தங்களது 6 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT