முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனித உரிமை மீறல் வழக்கில் அவருக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
1990-களில் பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற போர்வையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், அதற்கு அப்போதைய நிதியமைச்சர் என்ற முறையில் மன்மோகன் சிங் உடந்தையாக இருந்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது. "சீக்கியர்களுக்கான நீதி' (எஸ்.எஃப்.ஜே) அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றிருந்தபோது அவர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இருப்பினும், "ஒரு நாட்டின் தலைவர் என்ற முறையில் மன்மோகன் சிங்குக்கு இந்த வழக்கிலிருந்து சட்டப் பாதுகாப்பு உள்ளது" என அமெரிக்க நீதித்துறை அமைச்சகம், நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்தியாவில் ஆட்சி மாறிய நிலையில், பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் இல்லாததால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு அந்த அமைப்பு அண்மையில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், ஜூலை 10-க்குள் மன்மோகன் சிங்குக்கான சட்ட பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 10-ல் அமெரிக்க நீதித் துறை அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து மன்மோகன் சிங் வழக்கில் ஆஜராவது தொடர்பாக சிக்கல் எழும் என கூறப்படுகிறது.