உலகம்

ஜெர்மனியில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

செய்திப்பிரிவு

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 24,740 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி சுகாதாரத்துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 24,740 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணமான சாக்சனியில் கரோனா தீவிரமாக உள்ளது. மேலும் நேற்று மட்டும் கரோனாவுக்கு நாட்டில் 962 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலால், ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். இதுவரை மொத்தம், 28,096 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் கரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. அதில் ஜெர்மனியும் ஒன்று.

கரோனா பரவலின் தீவிரம் அதிகமாக உள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானனோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவால் உலக நாடுகளை மீண்டும் பீதி தொற்றிக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT