அமெரிக்க அதிபர் பதவியில் இருப்பவருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மீண்டும் புதிதாக இயங்கத் தொடங்கும் என்று ட்விட்டர் தரப்பு தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி கண்டார். புதிய அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த போது அவரது தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்திலிருந்தே ட்வீட்டுகளைப் பகிர்ந்து வந்தார். இது தவிர அமெரிக்க அதிபர் பதவியில் இருப்பவருக்காகக் தனியாக ஒரு ட்விட்டர் பக்கமும், வெள்ளை மாளிகைக்கான தனியான ட்விட்டர் பக்கமும் இருக்கிறது.
தற்போது அமெரிக்க அதிபருக்கான @POTUS பக்கத்தை 3.32 கோடி பேர் தொடர்கின்றனர். வெள்ளை மாளிகை பக்கத்தை 2.6 கோடி பேர் தொடர்கின்றனர். 2017ஆம் ஆண்டு ட்ரம்ப் ஜெயித்து, ஒபாமாவிடமிருந்து நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்த போது இருக்கும் கணக்குகளை ட்விட்டர் தரப்பு பிரதி எடுத்தது.
இதனால் ஒபாமா ஆட்சி காலத்தில் அவரது ட்வீட்டுகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டன. பிரதி எடுக்கப்பட்ட புதிய கணக்கில் பழைய ட்வீட்டுகள் இல்லையென்றாலும் பழைய பக்கத்தைப் பின் தொடர்ந்தவர்கள் அப்படியே புதிய பக்கத்தையும் தொடருவது போல ட்விட்டர் அமைத்துக் கொடுத்தது.
ஆனால் இப்போது ஜோ பைடன் பதவியேற்ற பின்பு பழைய ட்வீட்டுகள் பாதுகாக்கப்படும் என்றாலும், இந்த பக்கங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பக்கங்களைப் போல, பின் தொடர்பவர்கள் யாரும் இன்றியே தொடங்கப்படவுள்ளன. எனவே இனி விரும்புபவர்கள் புதிதாகப் பின் தொடர வேண்டும்.
பின் தொடர்பவர்களை புதிய பக்கத்துக்கு மாற்றாதது குறித்து பைடன் குழுவுக்கும், ட்விட்டர் நிர்வாகத்துக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை நிர்வாகத்துக்கான ட்விட்டர் பக்கங்களின் மாற்றங்கள் குறித்து பைடனின் குழுவுடன் பேசி வருவதாக ட்விட்டர் கூறியுள்ளது.
இது மட்டுமல்லாமல் புதிய நிர்வாகத்தில் முக்கிய துறைகளின் அத்தனை ட்விட்டர் பக்கங்களுமே, முன்பு தொடர்ந்தவர்கள் யாரும் இல்லாமல் பூஜ்யத்திலிருந்து புதிதாகவே ஆரம்பிக்கப்படவுள்ளன.
டொனால்ட் ட்ரம்ப் பயன்படுத்திய @POTUS கணக்கு, @POTUS45 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு முடக்கப்படும். அவரது தனிப்பட்ட ட்விட்டர் பக்கம் எப்போதும் போல அவர் கட்டுப்பாடில் இருக்கும். ஆனால் ஜனவரி 20க்குப் பிறகு அதற்குக் கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்படும். அவருக்கிருந்த சலுகைகள் நீக்கப்பட்டு அவரும் எல்லா பயனர்களையும் போலவே கருதப்படுவார்.