அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒவ்வொரு 33 நொடிக்கும் ஒருவர் கரோனாவால் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிறுவனம் வெளியிட்ட ஆய்வுத் தகவலை ராய்ட்டர்ஸ் வெளியிட்டது. அதில், “அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 18ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 2, 50,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் ஒவ்வொரு 33 நொடிக்கும் ஒருவர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். கடந்த ஏழு நாட்களில் 18,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.கலிப்போர்னியா மாகாணம் மற்றும் ரோடே தீவில் புதிய கரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளன. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர்தான் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. மேலும் அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸும் நேற்று கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்டார்.
மேலும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்கத் தலைவர்கள் பலரும் கரோனா தடுப்பு மருந்துகளைப் பெற்று வருகின்றனர்