உலகம்

தென் ஆப்பிரிக்கா: விமானப் போக்குவரத்துக்கு 5 நாடுகள் தடை

செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்காவிலும் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதால் அந்நாட்டுடனான விமானப் போக்குவரத்துக்கு 5 நாடுகள் தடை விதித்துள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''பிரிட்டனைப் போன்று தென் ஆப்பிரிக்காவிலும் புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு துருக்கி, ஜெர்மனி, இஸ்ரேல், ஸ்விட்சர்லாந்து, சவுதி அரேபியா ஆகிய 5 நாடுகள் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இரண்டாம் கட்டக் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு தீவிர நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.

கரோனா வைரஸின் புதிய வகையால் தென் ஆப்பிரிக்காவில் புதிதாகத் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா வைரஸைவிட இந்தப் புதிய வைரஸ் மிகுந்த வீரியம் கொண்டதாக இருக்கிறது என மருத்துவர்கள் கவலை கொள்கின்றனர். அதிலும் இளைஞர்கள் மத்தியில் இந்த வைரஸ் வேகமாகப் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் அச்சம் இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் நாளுக்கு நாள் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்று தென் ஆப்பிரிக்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸுக்கு 501.வி2 என்று பெயரிடப்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்படுவோர் மத்தியில் இந்த வைரஸின் தாக்கமே அதிகரித்துக் காணப்படுகிறது என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT