உலகம்

புதிய வகை கரோனா வைரஸுக்கு ஸ்புட்னிக் தடுப்பு மருந்து பயனுள்ளதாக இருக்கும்: ரஷ்யா

செய்திப்பிரிவு

ஐரோப்பாவில் தற்போது பரவி வரும் புதியவகை கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஸ்புட்னிக் மருந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் கூறும்போது, ''எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி ஐரோப்பாவில் தற்போது பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஸ்புட்னிக் மருந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது வைரஸின் தீவிரத்தைக் குறைக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் ஆகிய நாடுகளும் சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.

கரோனா தடுப்பு மருந்து

ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து கரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு கடந்த மாதம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளது.

SCROLL FOR NEXT