தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் மறைந்த தமிழினியின் உடல் நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெண் விடுதலைப்புலி தமிழினி (எ) சிவகாமி ஜெயக்குமரன். இவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு மகளிர் அணி பொறுப்பாளராக பதவி வகித்தவர். கடந்த 1991 முதல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்தார். 2009-ம் ஆண்டு மே இறுதிப்போரின்போது, பிரபாகரனின் பெற்றோருடன் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார். கடந்த 2013-ம் ஆண்டு விடுதலையானார். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கிளிநொச்சி பரந்தனில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல் நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.