ரஷ்யாவில் வசிக்கிறார் 7 வயது மாஷா. பிறக்கும்போதே டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு. மாஷாவின் அம்மா மரினா கோல்டிஷேவா பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். அவரது பள்ளியிலேயே மாஷாவும் படித்து வருகிறாள். பள்ளி மாணவர்களை வைத்துப் புகைப்படங்கள் எடுத்து, பள்ளி ஆண்டு புத்தகத்தில் வெளியிட்டிருக்கின்றனர். ஒரு வகுப்பு மாணவர்களின் புகைப்படத்தைப் பார்த்ததும் மாணவர்களின் பெற்றோர்கள் கொதித்துவிட்டனர். ‘‘டவுன் சிண்ட்ரோம் உள்ள குழந்தையை எப்படிச் சாதாரண மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேர்க்கலாம்? எங்கள் குழந்தைக்கு அருகில் மாஷா இருந்தால் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. உடனே புகைப்படத்தை நீக்க வேண்டும். 7 வயது குழந்தை எப்படி 11 வயது மாணவர்களுடன் அமர்ந்திருக்கலாம்?’’ என்று கேள்விகளை அடுக்குகிறார்கள். மாஷாவின் அம்மாவோ, ‘‘டவுன் சிண்ட்ரோம் உள்ள குழந்தைதான். ஆனால் ஒருநாளும் பிற மாணவர்களுக்குத் தொந்தரவு கொடுத்ததே இல்லை. மிகவும் புத்திசாலி. குழந்தையை நானே கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் பணிபுரியும் பள்ளியில் சேர்த்திருக்கிறேன். மாணவர்களின் பெற்றோர் அவமானப்படும்படி எந்த விஷயத்தையும் மாஷா செய்யவில்லை. புகைப்படங்கள் எடுத்த நாளன்று, புகைப்படக்காரரிடம் தன்னை ஒரு புகைப்படம் எடுக்குமாறு மாஷா கேட்டிருக்கிறாள். புகைப்படக்காரர் மாஷாவை, இந்த மாணவர்களோடு உட்கார வைத்துவிட்டார். இந்த விஷயம் எனக்குத் தெரியாது. இதில் மாஷாவோ, நானோ எந்தத் தவறும் செய்யவில்லை’’ என்கிறார் மரினா. மிக அற்புதமான, புத்திசாலியான ஆசிரியர் என்பதாலும் தவறு மாஷா மீதோ, மரினா மீதோ இல்லை என்பதாலும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்ப்பு வலுக்கிறது. அதே நேரம் மாஷாவுக்காக, ரஷ்யாவின் சூப்பர் மாடல் நடாலியா வோடியானோவா உட்பட பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
குறைபாடு மாஷாவுக்கா, எதிர்ப்பாளர்களுக்கா?
அமெரிக்காவின் மேற்கு சியாட்டில் பகுதியில் ஒரு வித்தியாசமான மையம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கே குழந்தைகளுக்காக ஆரம்பப் பள்ளியும் முதியோருக்கான இல்லமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளும் முதியோர்களும் மனிதர் களுடன் பேசுவதையும் பழகுவதையும் அதிகம் விரும்புவார்கள். வாரத்தில் 5 நாட்கள் குழந்தைகள் முதியவர்களுடன் கலந்துரை யாடுகிறார்கள். நடனம், ஓவியம், இசை, மதிய உணவு, கதை சொல்லுதல் என்று பல விஷயங்களிலும் குழந்தைகளும் முதியவர் களும் சேர்ந்தே பங்கேற்று வருகிறார்கள். ‘‘ஒவ்வொரு நாளும் குழந்தைகளை எதிர்பார்த்து காத்திருப்பது எங்களுக்குப் பிடித்தமான விஷயமாகிவிட்டது. பெற்றோர்களை விட பாட்டி, தாத்தாவுக்குப் பேரன், பேத்திகள் மீது கண்மூடித்தனமான அன்பு இருக்கும். அவர்கள் என்ன செய்தாலும் ரசிக்க வைக்கும். அதைத்தான் நாங்கள் இங்கே அனுபவிக்கிறோம். முதுமையில் தனிமை கொடுமையானது. நாங்கள் அந்தத் துயரத்தை அனுபவிக்கவில்லை’’ என்கிறார் முதியவர் ஒருவர். அதேபோல குழந்தைகளும் தங்கள் சொந்த தாத்தா, பாட்டி போல அத்தனை உரிமையுடன் பழகுகிறார்கள், விளையாடுகிறார்கள், விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த மையத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட இவான் ப்ரிக்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பாளர், இவர் களை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். படத்தின் தலைப்பு ‘பிரசன்ட் பர்ஃபெக்ட்’. இந்தத் திரைப்படம் எடுப்பதற்காக ஏராளமானவர்கள் நன்கொடைகளை அளித்து வருகிறார்கள்.
அட! நல்ல விஷயத்தை உலகத்துக்குத் தெரியப்படுத்துவதும் நல்லதுதானே…
வாஷிங்டனில் உள்ள ஒலிம்பிக் தேசியப் பூங்காவுக்கு உட்பட்ட காலேவாக் கடற்கரையில் தொங்கிக்கொண்டிருக்கிறது ஓர் அதிசய மரம். மரத்தின் வேர்ப்பகுதிக்கு அடியில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. பள்ளத்துக்கு இரு பக்கங்களிலும் உள்ள மண்ணில் வேர்கள் பரவியுள்ளதால் மரம் கீழே விழாமல் இருக்கிறது. குறைந்த மண்ணில் ஊடுருவியுள்ள வேர்களில் இருந்து ஒரு பெரிய மரத்துக்கான சத்துகளும் எப்படிக் கிடைக்கின்றன என்று எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். பல ஆண்டுகளாக இப்படியே வாழ்ந்து வரும் இந்த மரம் மோசமான புயலிலும் பாதிக்கப்படவில்லை. இன்றும் பச்சை இலைகளுடன் புத்தம் புது மரமாகக் காட்சியளிக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் வாழ முடியும் என்பதற்கு உதாரணமாக அந்தப் பகுதி மக்கள் இந்த மரத்தைப் பார்க்கிறார்கள்.
தன்னம்பிக்கை மரம்!