நேபாள நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடுமாறு பிரதமர் கே.பி.சர்மா ஒளி, அதிபருக்கு இன்று பரிந்துரை செய்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்சிபி கட்சிக்குள் இரு மூத்த தலைவர்களான பிரதமர் ஒளிக்கும், முன்னாள் பிரதமரும் கட்சியின் நிர்வாகக்குழு தலைவரான பிரசண்டாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் அதிகார மோதல் நீடித்து வந்தது. இந்த மோதலின் முடிவு தற்போது ஆட்சிக் கலைப்பில் முடிந்துள்ளது.
2017-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (என்சிபி) ஆட்சிக்கு வந்தது. தற்போது அந்தக் கட்சிக்கு 275 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே நேபாள பிரதமர் ஒளிக்கும், முன்னாள் பிரதமர் பிரசண்டாவுக்கும் இடையே மோதல் வலுத்து வந்த சூழலில், பிரதமர் ஒளி தலைமையில் இன்று காலை அவசரமாக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்துக்குப் பின் நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கோரி அதிபர் பித்யா தேவி பந்தாரிக்கு, பிரதமர் ஒளி பரிந்துரை செய்துள்ளார். இந்தப் பரிந்துரை தொடர்பாக அதிபரையும், பிரதமர் ஒளி சந்தித்துப் பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், இந்தியாவின் எல்லைப் பகுதியை இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுடன் மோதல் போக்கை பிரதமர் ஒளி கடைப்பிடித்து சீனாவுடன் நெருக்கம் காட்டினார்.
ஆனால், பிரதமர் ஒளியின் இந்தச் செயலை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கண்டித்தது. இதனால், என்சிபி கட்சியின் கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் பிரசண்டாவுக்கும், பிரதமர் ஒளிக்கும் இடையே கூட்டத்தில் நேரடியாக மோதல் வெடித்தது.
இதையடுத்து, சிலர் அண்டை நாட்டின் உதவியுடன் என் ஆட்சியைக் கலைக்கத் திட்டமிடுகிறார்கள் என்று பிரசண்டா மீது பிரதமர் ஒளி வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவத்துக்குப் பின் இருவருக்கும் இடையே மோதல் தீவிரமானது.
இதற்கிடையே பிரதமர் ஒளி, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடுமாறு அதிபருக்குப் பரிந்துரைத்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நேபாள அரசியலமைப்புச் சட்டப்படி, பிரதமருக்குப் பெரும்பான்மை இருந்தால், நாடாளுமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரை செய்ய எந்த அதிகாரமும் இல்லை. ஆட்சிக் காலம் முடியும் வரை பிரதமர்கள் மாறலாம். ஆனால், ஆட்சியைக் கலைக்க முடியாது என்று அரசியல் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே என்சிபி கட்சிக்குள் பிரச்சினை வலுத்து ஆட்சியைக் கலைக்கப் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சியும் இன்று மாலை அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.