உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்டுள்ள சிரியாவில் அரசுக்கு ஆதரவாக வான் வழி தாக்குதல் நடத்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அந்நாட்டு நாடாளு மன்றம் நேற்று அதிகாரம் வழங்கியது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக ஐ.எஸ்.தீவிரவாதிகளும் அமெரிக்க ஆதரவு பெற்ற புரட்சிப் படையினரும் கடந்த 4 ஆண்டு களுக்கும் மேலாக போரிட்டு வருகின்றனர். இதில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சிரியாவில் அரசுக்கு ஆதரவாக வான்வழி தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா தனது ராணுவத்தை அனுப்ப முடிவு செய்துள்ளது. அதிபர் விளாடிமிர் புதினின் இந்த முடிவுக்கு ரஷ்ய நாடாளுமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை உயர் அதிகாரி செர்கே இவானோவ் கூறும்போது, “சிரியா அரசுக்கு ஆதரவாக விமானப் படை வீரர்கள் மூலம் வான் வழி தாக்குதல் நடத்த நாடாளுமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதேநேரம், தரைப்படையைப் பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை” என்றார்.