கரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஸ்விட்சர்லாந்து அரசு பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சுவிட்சர்லாந்து அரசு தரப்பில், “ ஸ்விட்சர்லாந்தில் கடந்த சில நாட்களாகவே கரோனா அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தில் கரோனா தொற்று 4 லட்சத்தைக் கடந்துள்ளது. 6,000 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.
எனவே கரோனா பரவலைத் தடுக்க உணவு விடுத்திகள், விளையாட்டு மையங்கள், ஆகியவை மூடப்பட்டுள்ளன. மேலும் பொது மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு, வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, சவுதி ஆகிய நாடுகளும் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.