உலகம்

ஜப்பானை உலுக்கிய வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை

செய்திப்பிரிவு

ஜப்பானில் தற்கொலை எண்ணம் கொண்டவர்களிடம் சமூக வலைதளத்தில் நட்புடன் பழகி, கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து டோக்கியோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “சமூக வலைதளப் பக்கங்களில் ஒன்றான ட்விட்டரில் 'ட்விட்டர் கில்லர்' என்ற பெயரில் தகாஹிரோ ஷிரைஷி என்ற இளைஞர், தற்கொலை எண்ணம் குறித்து பதிவிடுபவர்களைத் தொடர்புகொண்டு வந்துள்ளார். பின்னர் அவர்களிடம் நட்புடன் பழகி அவர்களது தற்கொலை எண்ணத்தை நிறைவேற்றுவதாகக் கூறி 9 பேரைக் கொலை செய்தார். இதில் பெண்களும் அடங்குவர்.

ஜப்பானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் குற்றவாளியான தகாஹிரோ 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நடந்த வழக்கில் டோக்கியோ நீதிமன்றம் குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது” என்று செய்தி வெளியானது.

தற்கொலை எண்ணம் கொண்டவர்களையே கொலை செய்ததாகக் கூறிய தகாஹிரோ தரப்பு வாதத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

டோக்கியோ நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை ஜப்பான் மக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT