பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக ரூ.736 கோடி (10 கோடி அமெரிக்க டாலர்) இழப்பீடு கோரி காஷ்மீர் காலிஸ்தான் எனும் பிரிவினைவாத அமைப்பும், அதன் இரு துணை அமைப்புகளும் தொடர்ந்த வழக்கை டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த வழக்கைத் தாக்கல் செய்த மனுதாரர்கள் இரு முறை விசாரணைக்கு வருமாறு கோரியபோதிலும் வரவில்லை என்பதால் மனுவைத் தள்ளுபடி செய்து, வழக்கையும் ரத்து செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
அதன்பின் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதையடுத்து, இந்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கோரியும் பிரதமர் மோடி, அமித் ஷா, லெப்டினென்ட் ஜெனரல், பாதுகாப்புத் துறையின் உளவு அமைப்பின் இயக்குநர் கன்வால் ஜீத் சிங் தில்லான் ஆகியோருக்கு எதிராகக் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி வழக்குத் தொடரப்பட்டது.
பிரதமர் மோடி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன் டெக்சாஸ் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டது.
காஷ்மீர் காலிஸ்தான் வாக்கெடுப்பு முன்னணி எனும் பிரிவினைவாத அமைப்பும், டிஎப்கே, எஸ்எம்எஸ் எனும் துணை அமைப்புகளும் சேர்ந்து 10 கோடி அமெரிக்க டாலர் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தன.
இந்த மனு டெக்சாஸ் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பிரான்சஸ் ஹெச்.ஸ்டாகே முன்னிலையில் இரு முறை விசாரணைக்கு வந்தது. இருமுறையும் மனுதாரர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து பரிந்துரைப்பதாகக் கடந்த அக்டோபர் 6-ம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில் டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மாவட்ட நீதிபதி ஆன்ட்ரூ எஸ்.ஹனென், பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கை முழுமையாக ரத்து செய்வதாகக் கடந்த அக்டோபர் 22-ம் தேதி அறிவித்தார். இந்த மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் குர்பத்வாந்த் சிங் பன்னும் ஆஜரானார். இந்தத் தகவல் நீதிமன்றத்தின் மூலம் இப்போது வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபின், கடந்த பிப்ரவரி 18-ம் தேதி ஹூஸ்டனில் உள்ள இந்தியத் தூதரத்துக்கு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு நீதிமன்றம் சார்பில் சம்மனும் அனுப்பப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.