ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,080 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 28,080 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,81,256 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் 84 மாகாணங்களில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணியில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் அந்நாட்டு மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய அதிபர் புதின் அடுத்த வாரம் மிகப்பெரிய எண்ணிக்கையில் கரோனா தடுப்பு மருந்து நாட்டு மக்களுக்குச் செலுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளது.
கரோனா தடுப்பு மருந்து
ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.
இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு கடந்த மாதம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளது