வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் நாட்களை பிரிட்டன் அரசு குறைத்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் அரசுத் தரப்பில், “பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் நாட்கள் 14லிருந்து 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தடுப்பூசி முகாமை பிரிட்டன் அரசு தொடங்கியுள்ளது. பைஸர்-பயோஎன்டெக் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கரோனா தடுப்பு மருந்து, கரோனா வைரஸுக்கு எதிராக 95 சதவீதம் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, பிரிட்டனின் சுகாதாரத்துறை, மருந்து மற்றும் சுகாதாரத்துறை பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவை பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த அரசுக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்படும் என்று பிரிட்டன் அரசு சமீபத்தில் அறிவித்தது.
முதல் கட்டமாக, பிரிட்டனில் 80 வயதுக்கு அதிகமான முதியோர், முன்களப் பணியாளர்கள், வீடுகளில் பணியாற்றும் பணியாளர்கள், மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக பிரிட்டனில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.