உலகம்

வெள்ளை மாளிகைக்கு எதிரே நிர்வாண போராட்டம் நடத்திய நபர்

செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகைக்கு எதிரே ஒருவர் நிர்வாண போராட்டம் நடத்தி யதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்து, ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றனர்.

அந்த நபரின் பெயர் மைக்கேல் பெச்சார்ட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எதற்காக அவர் இந்த விநோத போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது தெரிவிக்கப் படவில்லை.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரை நியமித்து ஒபாமா உரை நிகழ்த்திய சிறிது நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வெள்ளை மாளிகை பகுதிக்கு வந்த அந்த நபர், திடீரென தனது உடைகளை களைந்தார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் தங்கள் செல்போன்களில் அதை காட்சியை படம் எடுத்தனர்.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பாதுகாவலர்கள் அந்த நபரை பிடித்து வாகனத்தில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் வெள்ளைமாளிகை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT