உலகம்

கரோனா தொற்றால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் நிரம்புகின்றன: இம்ரான்கான் எச்சரிக்கை 

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வருவதாக பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக கரோனா தொற்று 3,000-ஐக் கடந்துள்ளது. இதுவரை பாகிஸ்தானில் கரோனாவுக்கு 4,29,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து மற்றும் இஸ்லாமாபாத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. இஸ்லாமாபாத்தில் பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன. மக்கள் கூடும்போது கரோனா வைரஸ் பரவுகிறது. எனவே, பேரணிகளை நடத்தும் முன் எதிர்க்கட்சிகள் சித்திக்க வேண்டும்” என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், பாகிஸ்தானில் இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனினும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT