பிரதிநிதித்துவப்படம் 
உலகம்

கரோனாவால் உண்டான வேலையின்மை; நடுத்தர வயதினரிடையே இதய நோய்களை வரவழைக்க அதிக வாய்ப்பு: ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

உலக அளவில் ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளால் ஏற்பட்ட வேலையின்மை, நடுத்தர வயதில் உள்ள மனிதர்களுக்கு இதய நோய்களை அதிகம் வரவழைக்க வாய்ப்பு உள்ளது என்று நியூஸிலாந்தில் நடந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸால் மக்கள் தங்கள் இன்னுயிரையும் இழக்கின்றனர். பெரும்பாலான மக்கள் பொருளாதார ரீதியாகப் பல்வேறு பாதிப்புகளையும் சந்தித்தனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளில் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் நடவடிக்கையால், பொருளாதார வளர்ச்சி மிக மோசமாகச் சரிந்தது. தொழிற்சாலைகளில் உற்பத்திக் குறைவு, வேலையின்மை, ஊதியக் குறைப்பு எனப் பல சம்பவங்கள் நடந்தன.

கரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பிலிருந்து இன்னும் பல நாடுகள் முழுமையாக மீளவில்லை. அதற்கான முயற்சிகளில்தான் இன்னும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா வைரஸ் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பால் உண்டான வேலையின்மையால், நடுத்தர வயதினரிடையே இதய நோய்கள் அதிகம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொருளாதார வல்லுநரர், ஆய்வாளர் ஹூங் ஹீகம்.

நியூஸிலாந்தின் வெலிங்டனில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதார வல்லுநராக, ஆய்வாளராக இருக்கும் ஹூங் ஹீகம், மருத்துவர் அன்ஜா மிஸ்ராக், பேராசிரியர் நிக் வில்ஸன் ஆகியோர் இணைந்து, கரோனாவால் உண்டான வேலையின்மைக்கும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும், இதய நோய்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வில், கரோனா நெருக்கடியால் உண்டான வேலையின்மைக்கும், மனிதர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கும், திடீர் உயிரிழப்பைச் சந்திப்பதற்கும் அதிகமான தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தனர். அதாவது, நீண்டகால உளவியல் ரீதியான மன அழுத்தம், மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பொருளாதார வல்லுநர் ஹூங் ஹீகம் கூறியதாவது:

“விருப்பமில்லால் ஒருவர் வேலையிழப்பைச் சந்திக்கும்போதும் பெரும்பகுதி மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்களின் வாழ்க்கைத் தரம் குறைகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

நிதிரீதியாக பாதுகாப்பற்ற சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் மன உளைச்சல், ரத்த அழுத்தம் போன்றவை இதய நோய்களை வரவழைக்கிறது. குறிப்பாக இது நடுத்தர வயதினரிடையே அதிகமாக இருக்கிறது.

இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்கவே புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம், உதவித்தொகை போன்றவற்றைக் கரோனாவுக்குப் பிந்தைய நடவடிக்கைகளாக நியூஸிலாந்து அரசு எடுத்து வருகிறது. தொடர்ந்து வேலையின்மையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியமானதாகும்.

நியூஸிலாந்தில் வசிக்கும் மோரி மொழி பேசும் உள்நாட்டு மக்கள், பசிபிக் பகுதி மக்கள், தெற்காசிய மக்கள், குறைந்த ஊதியம் பெறும் நியூஸிலாந்து மக்கள் என இதயநோய் விகிதாசாரமில்லாமல் தாக்குகிறது.

அதிலும் நியூஸிலாந்தில் உள்ள குறைந்த ஊதியம் ஈட்டும் உள்நாட்டு மக்கள் திடீரென ஏற்படும் வேலையின்மையால் இதய நோய்களுக்கு அதிகம் ஆளாகின்றனர்”.

இவ்வாறு ஹூங் ஹீகம் தெரிவித்தார்.

மருத்துவர் மிஸ்ட்ராக் கூறுகையில், “வேலையின்மையால் உருவாகும் இதயம் தொடர்பான நோய்களை அரசு குறைக்க வேண்டும். இதற்காக வேலைவாய்ப்புகளைப் புதிதாக உருவாக்க வேண்டும், 2025-ம் ஆண்டுக்குள் நியூஸிலாந்தில் யாரும் புகை பிடிக்காதவர்கள் என்ற நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் உணவில் உப்பு, கொழுப்பு சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்வதிலும் மக்களுக்கு அறிவுறுத்தல், விதிமுறைகளைக் கொண்டுவருதல், தடுப்பு மருத்துவம், உயர் ரத்த அழுத்தத்தற்கான மருத்துவ சிகிச்சையைத் தொடங்க வேண்டும். சுகாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க வேண்டுமானால், வேலையின்மை மற்றும் இதய நோய் பிரச்சினைகளை அரசாங்கம் களைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT