ஒவ்வாமை போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் கரோனா தடுப்பு மருந்தை தவிருங்கள் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் அரசு தரப்பில், “ ஒவ்வாமை போன்றவற்றால் பாதிக்கப்படும் நபர்கள் பைஸர் கரோனா தடுப்பு மருந்தை தவிர்க்கலாம் என்று ஆலோசனை கூறுகிறோம். ஏனெனில் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்ட இரு நபர்களுக்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் குணமாகி வருகின்றனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தடுப்பூசி முகாமை பிரிட்டன் அரசு இன்று தொடங்கியுள்ளது. பைஸர்-பயோஎன்டெக் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கரோனா தடுப்பு மருந்து 95 சதவீதம் கரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, பிரிட்டனின் சுகாதாரத்துறை, மருந்து மற்றும் சுகாதாரத்துறை பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவை பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த அரசுக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, இன்று (செவ்வாய்கிழமை) பிரிட்டனில் மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
முதல்கட்டமாக பிரிட்டனில் 80 வயதுக்கு அதிகமான முதியோர், முன்களப்பணியாளர்கள், வீடுகளில் பணியாற்றும் பணியாளர்கள், மருத்துவ, சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக பிரிட்டனில் உள்ள 50-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.